மகளிர் உரிமைத்தொகை திமுகவினர்தான் பயன்பெறுவார்கள்: ஜெயக்குமார்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திமுகவினர்தான் பயன்பெறுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட திட்டங்களில் ஒன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இந்த திட்டம் மகளிர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் உரிமை தொகை திட்டம் பெறுவதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது. பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும். வீடுகளில் சொந்தமாக கார் இருக்கக் கூடாது” உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறப்பு முகாம்களை நடத்தி ஆவணங்களைப் பெற வேண்டும் என்று கூறினார். மகளிருக்கு மகுடம் சூட்டும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ” கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திமுகவினருக்கே இந்த திட்டத்தால் பயன் கிடைக்கும் என அதிமுக விமர்சித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தன்னார்வலர்களை கொண்டு கணக்கெடுப்பதாக சொல்கிறார்கள். கணெக்கெடுத்தால் யாருக்கு கொடுப்பாங்க.. அந்தந்த ஏரியாவில் திமுக ஒன்றிய செயலாளர், நகராட்சி செயலாளர், பேரூராட்சி செயலாளர் இவர்களின் கண்காணிப்பில் தான் தன்னார்வர்லர்கள் வேண்டியவர்களை கணக்கெடுத்து கொடுப்பார்கள். வேண்டியவர்கள் கணக்கெடுக்கும் போது அவர்கள் திமுகவினராக இருப்பார்கள். அப்போ.. இந்த ஆயிரம் ரூபாய் திட்டமே திமுகவினருக்காக கொண்டு வரப்பட்டதா? அதுதான் கேள்வியா கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் இபப்டி செய்கிறீர்கள்..ரேஷன் கார்டு மூலமாக 2 கோடிக்கு பேருக்கு கொடுத்து விட்டு போங்களேன். சொன்னது நீங்கள்தானே.. அதைத்தானே நாங்களும் கேட்கிறோம்” என்றார்.