தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் இன்று ஆளுநர் ஆர்என் ரவி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்என் ரவி அவரை சந்தித்து பேசினார். இந்த வேளையில் தமிழக அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். குறிப்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். மேலும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிய உத்தரவு, அதனை நிறுத்தி வைத்த விவகாரம் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். அதோடு அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க திமுக அனுமதி கோரிய கடிதம் பற்றியும் இருவரும் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. ஆளுநர் தன்னிச்சையாகவும், தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகவும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடும் விமர்சனங்களை செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்என் ரவி பிறப்பித்த உத்தரவு இருதரப்புக்கும் இடையே மோதலை அதிகரித்தது. அதன்பிறகு அடுத்த சில மணிநேரத்தில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைத்தார். இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டதன் பெயரில் தான் உத்தரவை ஆளுநர் ஆர்என் ரவி திரும்ப பெற்றதாக தகவல்கள் உள்ளன. இத்தகைய சூழலில் ஆளுநர் ஆர்என் ரவி, அமித்ஷா சந்திப்பு என்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.