சமூக வலைதளங்களில் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவிடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் துறைக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிடும் திமுகவினரை கைது செய்யக் கோரி மதுரை மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயரிடம் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை மனு அளித்தனர். பின்னர் இப்ராகிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சமூக வலைதளங்களில் திமுகவின் ஊழலுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் பாஜகவினரை தீவிரவாதிகள் போல் போலீஸார் கைது செய்து வருகின்றனர். அதே நேரத்தில் சமூக வலை தளங்களில் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து வரும் திமுகவினரை போலீஸார் கைது செய்வதில்லை. இதுகுறித்து பாஜகவினர் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை.
திமுகவினரின் தூண்டுதல் பேரில் பாஜகவுக்கு எதிரான சட்ட மீறல்களில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டை ஆளும் கட்சி நிர்வாகிகளை கொடூரமாக தாக்கும் மனநிலையில் போலீஸார் நடந்து கொண்டால் சாதாரண மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தால் போலீஸ் கண்டுகொள்வதில்லை. உள்துறையும் கண்டுகொள்வதில்லை. திமுகவின் மோசடிகளை பதிவிட்டால் மட்டும் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கேவலமானது. இது போலீஸாருக்கு மட்டும் அல்ல, காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கேவலம்.
தமிழக காவல் துறை நேர்மையாக செயல்பட வேண்டும். காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவினருக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை தொடர்ந்தால் மக்கள் பிரச்சினையாக மாற்றி காவல் துறைக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.