பிரதமர் மோடியையும், முதல்வர் ஸ்டாலினையும் ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை: சீமான்

திருமணம், படிப்பு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியையும், தன்னிடம் கார் இல்லை எனக்கூறியுள்ள முதல்வர் ஸ்டாலினை ஏன் இன்னும் தகுதி நீக்கம் செய்யவில்லை என சீமான் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக இருந்தார். இந்நிலையில் தான் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மோடி பெயர் குறித்து அவர் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திராத் குமார் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக உள்ளார். இவர் தனது வேட்புமனுவில் வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ராகுல் தகுதி நீக்கம் மற்றும் ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் ஆக்ரோஷமாக பதிலளித்தார். இதுபற்றி சீமான் கூறியதாவது:-

ராகுல் காந்தி மீதும் அவரது குடும்பம் மீதும், அவர்களின் கட்சி மீதும் இருக்கும் எங்களின் கோபம், வெறுப்பு, வெறி என்பது வேறு. ஆனால் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது என்பது ஒரு ஜனநாயக படுகொலை. ராகுலை ஒரு போட்டியாளர் என கருதவில்லை என கூறுகின்றனர். அப்புறம் ஏன் பயந்துகொண்டு அவரை தகுதி நீக்கம் செய்கிறீர்கள்?. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை வழங்கி தகுதி நீக்கம் அப்படியே நீட்டித்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை வந்துவிடும். இதனால் அந்த அளவுக்கு பயப்படுகிறீர்களா? என்ற கேள்வி வருகிறது. ராகுல் எல்லாம் எங்களுக்கு எல்லாம் ஒரு ஆளா என கூறுபவர்கள் அவரை அப்படியே விட்டுவிட வேண்டியது தானே?. ராகுல் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அவரை தகுதி நீக்கம் செய்ய நீங்கள் யார்?. அவருக்கு தகுதி இல்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் தான் அவரை தோற்கடித்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் தகுதி நீக்கம் செய்வது என்பது எந்த வகையான மக்களாட்சி? எந்தவகையான ஜனநாயகம்? என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு விஷயம் என்னவென்றால் மக்களால் தேர்வு செய்யப்படாத நபர் அருண் ஜெட்லி. அவரை மக்கள் ஒன்றரை லட்சம் ஓட்டில் தோற்கடித்தனர். ஆனால் அவரை வேறு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக கொண்டு வந்து அமைச்சராக்கினார்கள். இது ஜனநாயக விரோதம். மக்களாட்சிக்கு எதிரானது. அதேபோல் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது என்பது மக்களாட்சிக்கும் எதிரானது.

தம்பி ரவீந்திரநாத் பொய்யான செய்தியை கொடுத்துவிட்டதாக கூறினார்கள் என்றால் இந்த நாட்டில் யாருக்கு தான் தகுதி இருக்கு? என்ற கேள்வி எழுகிறது. மோடி 8 ம் வகுப்பு படித்ததாக ஒரு முறை கூறினார். அதன்பிறகு எம்ஏ என்கிறார். ஒருமுறை திருமணம் ஆகிவிட்டது என்றார். இன்னொரு முறை திருமணம் ஆகவில்லை என்கிறார். அவரை எப்படி தகுதி நீக்கம் செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் கார் இல்லை என கொடுத்துள்ளார். அவரை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலினிடம் கார் இல்லையா?.

வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம். மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும். அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம். விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். இதற்கு முன்பாக மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா?. இவ்வாறு அவர் கூறினார்.