பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினால் நாட்டுக்கு சேவையாற்ற கனவு காணும் இளைஞர்களின் கனவினை சிதறடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ராணுவத்தில் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் மனதளவில் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் எனக் கூறுவதை முன்பெல்லாம் வழக்கமாக வைத்திருந்தார்கள். இளைஞர்களின் இந்த தீர்மானத்தால் அவர்களுக்கு சிறப்பான வசதிகள் மற்றும் வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அக்னிபத் திட்டத்தின் அடிப்படையே தவறாக உள்ளது. இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை அக்னிபத் சிதறடித்துள்ளது. இந்த அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதன் முடிவுகள் அனைவருக்கும் முன்பாக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.