எந்த மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை: வானதி

எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. அப்படி கலைக்கவும் இல்லை என்று வானதி சீனிவாசன் கூறினார்.

கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமண வீடு என்றாலே எதிர்க்கட்சிகளை திட்டுவதற்கான ஒரு இடமாகத்தான் முதல்வர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி மீது விமர்சனம் வைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பார்த்து பிரதமர் மோடிக்கு எரிச்சல், பொறாமை என்று எல்லாம் சொல்லியிருக்கிறார். அதேபோல, எனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் நாங்கள் பயப்பட போவது இல்லை என்று சொல்லியிருக்கிறார். எதற்காக முதல்வருக்கு அந்த பயம் இப்போது வந்து இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் ஆட்சியை கலைப்பதற்கு எந்த அரசியல் சட்டப்பிரிவை பயன்படுத்தி ஒரு மாநில அரசை கலைக்க என்ன காரணங்களை கூறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதோ.. அது எல்லாம் இந்த மாநிலத்தில் நடைபெற்று வருவதாக என்று முதல்வர் நினைக்கிறரா.. ஏனெனில் எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. அப்படி கலைக்கவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதனால் முதல்வருக்கு எதற்காக இந்த திடீர் பயம் வந்து இருக்கிறது என்று தெரியவில்லை.

மோடி பயப்படுகிறார்.. எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேருவதை பார்த்து எரிச்சல் படுவதாக நினைக்கிறார். முதலில் எதிர்க்கட்சிகள் முதல் கூட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள். அடுத்த கூட்டத்தை இனிமேல்தான் நடத்த போகிறீர்கள். அதற்குள் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கு… நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு மோடி பயப்படுகிறார் என பேசுவது கற்பனை. எனவே முதல்வர் மு.கஸ்டாலின் தனது கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து தமிழக பிரச்சினைகளை வந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார் என்று பேசுவது மாநிலத்தின் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக தங்களுக்கு ஏதோ ஆட்சிக்கு ஆபத்து வருவது போல உருவத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இதைத்தாண்டி அதில் எந்த உண்மையும் இல்லை. முதலில் தமிழகத்தில் ஆட்சியை நன்றாக நடத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.

குடியரசுத்தலைவருக்கு முதல்வர் எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை. கலாசாரம் பற்றி பண்பாட்டு தலங்கள் பற்றி ஆளுநர் பேசுவது முதல்வருக்கு எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு வேறு யாரும் மாற்றுக் கருத்து சொல்லக்கூடாது என்ற எதேச்சதிகார மனநிலைக்கு முதல்வர் சென்று கொண்டிருக்கிறரா? என்றார்.

அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையை சந்திக்காமல் தவிர்ப்பதாகவும், உங்களுக்குள் பிரச்சினை இருப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளதே என்று கேட்டனர். இதற்கு சிரித்தபடியே பதிலளித்த வானதி சீனிவாசன், ” இப்படி வேற கதையை புதுசா உருவாக்கிட்டு இருக்கீங்களா.. அதில் உண்மையும் இல்லை. அண்ணாமலைக்கும் எனக்கும் கோவைக்கு வரும் போதும் சரி.. வெளியேயும் சரி..எந்த பிரச்சினையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக ஒற்றுமையாக கட்சியை வளர்த்து வருகிறோம்” என்றார்.