ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள கடிதத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே இருந்து வந்த உரசல், தற்போது உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. முதலில் தமிழக அரசை பொதுவெளியில் விமர்சித்து வந்த ஆளுநர், அதன் பிறகு திமுகவின் சிந்ததாந்தத்தையும், திராவிடக் கொள்கைகளையும் விமர்சிக்க தொடங்கினார். இதன் உச்சக்கட்டமாக, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தன்னிச்சையாக நீக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சூழலில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரின் ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி கோரும் கோப்புகளை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.
ஆளுநரின் இந்த செயல்களால் பொறுமை இழந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நேற்று 16 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில், “ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக அமைந்துள்ளது. முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற தாமதம் காட்டுகிறார். குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தாமதம் செய்கிறார். குற்றவாளிகளை ஆதரிக்கிறார். எனவே, ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தகுதியானவர் ஆர்.என்.ரவி. அவர் பதவியில் நீடிக்கலாமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்தக் கடிதம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முதல்வரின் இந்தக் கடிதம் தொடர்பாக திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குடியரசுத் தலைவருக்கு முதல்வரின் இந்தக் கடிதம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனாலும் கூட, ஆளுநரின் போக்குகளை மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் தெரிவிக்க வேண்டியது முதல்வரின் கடமை. ஆளுநர் ரவி குறித்து மத்திய அரசுக்கு பல முறை முறையிட்டும், அவர்கள் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். எனவே தான், தற்போது குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதி இருக்கிறார். குடியரசுத் தலைவரும் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். இருந்தாலும், இந்தக் கடிதம் தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.