டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 14ம் தேதி விசாரிக்கிறது.
டெல்லி துணை முதல்வராக இருந்தவர் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா. இவர் மீது 2021-22ம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் சிசோடியா கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிசோடியா மற்றும் அவரது மனைவி சீமா மற்றும் ராஜேஷ் ஜோஷி, கவுதம் மல்கோத்ரா ஆகியோருக்கு சொந்தமான ரூ. 52.24 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனிடையே மணீஷ் சிசோடியாவின் மனைவி சீமா கடந்த 2020ம் ஆண்டு கடுமையான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது மூளை கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதற்காக இவர் கடந்த 23 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் மணீஷ் சிசோடியா டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் இவரை கவனித்து கொள்ள ஆளில்லை. இதற்கு முன்பு, இவர் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவினால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள அனுமதி வேண்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை வரும் 14ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.