கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசலப் பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக கொட்டும் மழையால் வட மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹிமாசலப் பிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் வீடுகள், கட்டடங்கள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், ஹிமாசலப் பிரதேச மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், “ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் பருவ மழை ஏற்படுத்தியுள்ள பேரழிவின் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை அடைந்தேன். பேரழிவுகளை காட்டும் காணொலிகள் கவலையடைய வைத்துள்ளது. தமிழக அரசின் முழு ஆதரவும், உதவியும் ஹிமாசலுக்கு அளிப்போம் என்று முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு உறுதி அளிக்கிறேன். ஹிமாசல் சகோதர, சகோதரிகளுடன் தமிழகம் ஒற்றுமையாக நிற்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.