அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் என்றால், அவரது உத்தரவுப்படி அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகள், கைது நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை குறிவைப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் உள்ளார். அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே அமலாக்கத்துறையின் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நேற்று தீர்ப்பு வழங்கியது. இதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதுக்குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பாஜக அரசு மூன்றாவது முறையாக வழங்கிய முறைகேடான பதவி நீட்டிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட இயக்குநரின் உத்தரவுப்படி அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகள், எடுத்த கைது நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா? அவையெல்லாம் தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா?
அமலாக்கத்துறை எந்தவொரு தனிநபரையும் சார்ந்ததல்ல என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அப்படியென்றால் சஞ்சய் குமார் மிஸ்ரா தனிநபர் இல்லையா? கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மூன்று முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? பாசிச பாஜக அரசின் ஒட்டுமொத்த எதேச்சதிகாரச் செயல்பாட்டின் ஒற்றை வடிவம் சஞ்சய் மிஸ்ரா என்பதால் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.