அமலாக்க துறையின் அதிகாரம் அப்படியே தான் இருக்கும்: அமித் ஷா

அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை இயக்குநராக உள்ள சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலத்தை 3 முறை மத்திய பாஜக அரசு நீட்டித்திருந்தது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 3-வது முறையாக அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியின் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை நீதிபதி ஆர்.ஆர்.கவாய் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தது. அதாவது எஸ்கே மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும் இது 2021 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. மேலும், ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே மிஸ்ரா அமலாக்கத் துறைத் தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்று அதன் பிறகு அவர் அப்பதவியில் நீட்டிக்கக் கூடாது எனத் தெரிவித்தது. இந்த தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இது குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அமலாக்க இயக்குநராக யார் இருக்கிறார் என்பது முக்கியமல்ல என்று குறிப்பிட்ட அமித் ஷா, இந்த பதவியை யார் ஏற்றுக்கொண்டாலும், வளர்ச்சிக்கு எதிரானதாக இருக்கும் ஊழல் புரிவோருக்கு எதிராகவே அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “அமலாக்கத் துறை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சிலர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.. ஆனால், அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஏமாற்றமடைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்ட – மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் சட்ட திருத்தங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அமலாக்கத் துறைக்கு யார் தலைவராகப் பொறுப்பேற்றாலும் அதன் அதிகாரங்கள் அப்படியே இருக்கும். ஊழல் செய்பவர்கள் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறையினர் அதிகாரங்கள் அப்படியே தான் இருக்கும். அமலாக்கத் துறை என்பது எந்தவொரு தனிநபரைச் சார்ந்ததும் இல்லை. தனி நபரைத் தாண்டி அமைப்பாகவே இது இருக்கிறது. பண மோசடி குற்றங்கள் மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறுவோரை விசாரிப்பதே அதன் முக்கிய நோக்கமாகும். எனவே, அமலாக்கத் துறையினர் இயக்குநர் யார் என்பது முக்கியமல்ல. ஏனெனில் அந்த பதவியை யார் ஏற்றுக் கொண்டாலும், வளர்ச்சிக்கு எதிரான மனநிலையைக் கொண்ட ஊழல்வாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தொடரும்” என்று அவர் தெரிவித்தார்.