அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டனர். அன்று இரவே அவர் கைதும் செய்யப்பட்டார். ஆனால், நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, தனது கணவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாகவும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ஒன்றை மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த சில நாட்களாக நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதிகள் இருவருமே இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். நீதிபதி நிஷா பானு அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதே நேரம் அதற்கு முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கினார். செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்று அவர் கூறினார். தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு சிகிச்சை பெறலாம் என்றும், அதன் பின்னர் சிறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி மனுவை அவர் தள்ளுபடி செய்தார்.
செந்தில் பாலாஜி வழக்கில் முடிவு கிடைக்காததை தொடர்ந்து வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சிவி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, கபில் சிபல் ஆகியோர் வாதிட்டனர். அவர்களின் வாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் வாதம் நடைபெற இருக்கிறது. இறுதியாக இன்று நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலும் இன்று நிறைவடைகிறது. அவருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல் நீட்டிப்பு வழங்கலாம் என நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்துள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், காணொளிக்காட்சி வாயிலாக இன்று ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.