கோடநாடு விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்த தி.மு.க.வுடன், ஓ.பன்னீர்செல்வம் கைகோர்த்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தை தி.மு.க. அரசு தீர விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி ஆகஸ்டு 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளர். இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கோடநாட்டில் கொலை-கொள்ளை நடந்தவுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசு. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது. இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கு தாமதமானது. இருந்தாலும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பும் வழங்கக்கூடிய நிலையில் இருந்தது. இந்த சமயம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. தலைமையில் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. அவரும் விசாரணை அறிக்கையை, நீலகிரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் 90 சதவீத விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கை உதவி காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி விசாரித்து வருகிறார். மேற்கு மண்டல ஐ.ஜி. 90 சதவீத வழக்கை விசாரித்து முடித்திருக்கும் சூழ்நிலையில், ஏன் அவரைவிட குறைந்த பதவி உள்ள அதிகாரிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு உள்ளது? இதன் மர்மம் என்ன?. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த குற்றவாளிகள் கொலை-கொள்ளை, திருட்டு, ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்கள் புரிந்தவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் வாதாடி இருக்கிறார்கள். அதை முதல்-அமைச்சரும் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஜாமீன்தாரர்களாகவும் இருந்துள்ளனர். எனவேதான் இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகிய இருவரும் தங்கி இருந்த ஓட்டலில் அவர்கள் எவ்வாறு இந்த குற்ற சம்பவங்களை செய்தார்கள்? என்று பேசிக்கொண்டிருந்த நிகழ்வு வலைதளங்களில் வெளிவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சயான், தனது மனைவி, குழந்தையுடன் கேரளா சென்று கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தனர். சயான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது ஒரு விபத்து என்று கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. சயான், மனோஜ் ஆகியோருக்காக ஆஜரான ராஜ் திலக் தற்போது அரசு வக்கீலாக இருக்கிறார். மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ தற்போது தி.மு.க. எம்.பி. ஆக உள்ளார். ஊட்டியில் கோடநாடு வழக்கில் ஆஜரான வக்கீல்களில் ஒருவரான ஆனந்தன், முன்னாள் அரசு வக்கீல் ஆவார். இருவருக்கும் ஜாமீன் கொடுக்கும்போது தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி ஜாமீன் ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில், இந்த குற்றவாளிகளுக்கும், ஜாமீன்தாரர்களுக்கும் என்ன தொடர்பு?. இதுவரை ஜாமீன்தாரர்கள் எந்த நிலையிலும் விசாரிக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில் தி.மு.க. அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதற்கு உறுதுணையாகதான் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். உள்நோக்கத்துடன் இந்த விஷயத்தை செயல்படுத்துகிறார்கள் என்றுதான் தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்கிறோம். கால சக்கரம் சுழலும். இன்றைக்கு அதிகாரம் இருக்கும் நிலையில் எப்படி வேண்டுமானாலும் மிரட்டி பார்க்கின்ற அந்த மாய வித்தைக்கெல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது. காட்சிகள் மாறும். ஆட்சி மாறும். ஆட்சி மாறும்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அத்தனை அராஜகங்கள், அநியாயங்கள், அட்டூழியங்கள், படுகொலைகள், கொள்ளைகள் என எல்லாமே அடுத்து வரும் அ.தி.மு.க. ஆட்சியில் தீர விசாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் நீதி நிலைநாட்டப்படும்.
அதேவேளை அ.தி.மு.க.வின் கட்சி கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்குதான் சொந்தம். அந்த வகையில் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அ.தி.மு.க.வினர் அனைவரும் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனவே இதன்பிறகு அ.தி.மு.க. கொடியை, இரட்டை இலை சின்னத்தை ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்துவது ‘போர்ஜரி’ ஆகும். இது மாபெரும் குற்றம் என்ற வகையில் கடும் நடவடிக்கையை கட்சி எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.