நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறிவிட்டு இன்னமும் செலுத்தவில்லை என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாடியிருந்தார். இதற்கு படு காட்டமாக பதில் அளித்திருந்தார் அண்ணாமலை.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சாடி இருக்கிறார் அண்ணாமலை. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில் கூறியுள்ளதாவது:-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும்.
1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர் போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா? என கேட்டுள்ளார் அண்ணாமலை.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார்.
அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லவில்லை. திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? தங்கள் மருமகன் தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை? முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் திமுக அரசு? என கேட்டிருந்தார்.