நெக்ஸ்ட் தேர்வுக்கு மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘பி.ஜி. நீட்’ என்கிற தேர்வை எழுதி வந்தனர். இதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் ‘நெக்ஸ்ட்’ எனப்படும் புதிய தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்ததது. அதாவது, எம்.பி.பி.எஸ் முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வதற்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதிதேர்வினை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டு இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நெக்ஸ்ட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மருத்துவ மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் கடந்த மாதம் நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், நெக்ஸ்ட் தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். எனினும் நெக்ஸ்ட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. நெக்ஸ்ட் தேர்வுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 28 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நெக்ஸ்ட் தேர்வு(Mock Test) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவுறுத்தல் வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ராய்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிகழ்ச்சியில் கடந்த 6 ஆம் தேதி பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, நெக்ஸ்ட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் தான் நடைபெறும் 2019 பேட்ச் மாணவர்களுக்கு நடத்தப்படாது என்று பேசியிருந்தார். இதனால் மருத்துவ மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவிய நிலையில் தற்போது தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.