கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இந்த 3 பேருக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்ததாகவும், தற்போது அமளி பூங்காவாக உள்ளதாக கூறினார். தமிழகத்தில், பெட்ரோல் குண்டு கலாசாரம் தலைத்தூக்கியுள்ளது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ள நிலையில் சாதாரண குடிமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கட்டியதை போல சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம் அப்பகுதியில் உள்ள ராமதாஸ் நகர் மக்களுக்காக தான் கட்டப்பட்டதாகவும், அவர்களுக்கு அந்த வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
செந்தில் பாலாஜியை பாதுகாக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி. தினகரன், சசிகலாவுக்கு பொருந்தாது. திமுக கூட்டணியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அடுத்த 9 மாதங்களில் என்ன வேணுமானாலும் நடக்கலாம். தோற்பவர்களுடன் பயணிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் திமுக அணியில் இருப்பவர்கள் எங்கள் அணிக்கு வர வாய்புள்ளது எனக் கூறினார்.