சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படும் இன்றைய நாள் (14 ஜூலை 2023) பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “சந்திரயான்-3 நிலவு ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் இன்றைய நாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்த விண்கலம் நமது தேசத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சுமந்து செல்லும் ” என்று பதிவிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
சந்திரயான்-3 மிஷனுக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் தருணத்தில் மக்கள் அனைவரும் சந்திரயான் திட்டம் பற்றியும் விண்வெளித் துறையில், அறிவியல், புத்தாக்கத் துறையில் நாம் அடைந்த வெற்றிகளை அறிந்துகொள்ளும்படி வேண்டுகிறேன். அந்த வரலாறு உங்கள் அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும்.
விண்வெளித் துறையில் இந்தியா மிகவும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சந்திரயான்-1, நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதிப்படுத்தியதால், உலகளாவிய நிலவுப் பயணங்களுக்கான ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. சந்திரயான் -1 உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட அறிவியல் வெளியீடுகளில் இடம்பெற்றது.
சந்திரயான்-2 விண்கலம் முதல் முறையாக நிலவில் குரோமியம், மாங்கனீஸ் மற்றும் சோடியம் இருப்பதைக் கண்டறிந்தது. நிலவின் பாறைகளில் இருக்கும் கனிம வளங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு பெரிய வழித்தடத்தை நிறுவியது.
இப்போது சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படவுள்ளது. சந்திரயான்-3 நிலவு ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் இன்றைய நாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்த விண்கலம் நமது தேசத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சுமந்து செல்லும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.