சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு அக்டோபர் 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் மூன்றாவது நபரான மனுதாரர் எப்படி வழக்கை தாக்கல் செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஆடல்வல்லான் நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். நடராஜரின் பொற்சபையாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.

நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றயதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ததற்காக அங்குள்ள தீட்சிதர்களால் கண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோவில் தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை பிறப்பித்தது. தீட்சிதர்கள் விதித்த தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து, நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

நடராஜர் கோயிலில் பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர். ஏற்கெனவே கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களோடு சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி 4 நாட்கள் பக்தர்கள் கனகசபை ஏறுவதற்கு தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறிவிப்பு பலகையை அகற்றினர்.

இந்நிலையில், கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, தீட்சதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ள கனகசபையிலிருந்து தரிசிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் மூன்றாவது நபரான மனுதாரர் எப்படி வழக்கை தாக்கல் செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.