கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை தர உள்ள நிலையில், மதுரையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; பாதுகாப்புகளை கூடுதல் டிஜிபி இன்று ஆய்வு செய்தார்.
மதுரை – புதுநத்தம் சாலையில் டிஆர்ஓ காலனி அருகில் ரூ.215 கோடியில் பிரம்மாண்ட வடிவில் முன்னாள் முதல்வர் பெயரில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஜூலை15) மாலை நடக்கிறது. இதற்காக மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நூலக வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன. விழாவில் திமுகவினரைவிட, பள்ளி, கல்வி மாணவ, மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் (மாணவர்கள்) அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் தங்கி நூலக திறப்பு விழா ஏற்பாடுகளை கவனிக்கிறார். தொடர்ந்து அமைச்சர்கள் வேலு, பி. மூர்த்தி, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகளும் விழா மேடை, பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை இன்று ஆய்வு செய்தனர்.
நூலக திறப்பு விழாவிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 15) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு 11.25 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பின், மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிக்கைக்கு 12.30 மணிக்கு வந்தடைகிறார். மாலை 4 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு, 4.30 மணிக்கு கலைஞர் நூலகத்தை சென்றடைகிறார். பின்னர் கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார். நூலகத்தில் முதல், 2ம் தளங்களை பார்வையிட்டபின், 5.30 மணிக்கு ஆயுதப்படை மைதானத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். விழா முடிந்து 6.30 மணிக்கு புறப்படும் முதல்வர், 7 மணிக்கு மதுரை கோச்சடை பகுதியிலுள்ள மறைந்த கருமுத்து கண்ணன் வீட்டுக்குச் செல்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அவர், 8 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடைகிறார். இரவு 10.10 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்வர் மதுரை வருகையையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம், முதல்வர் வழித்தடப் பகுதி, கலைஞர் நூலகம், ஆயுதப்படை மைதானம், அரசு சுற்றுலா மாளிகை போன்ற இடங்களில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதற்காக திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் 6 எஸ்பிக்கள், 60-க்கும் மேற்பட்ட கூடுதல் டிஎஸ்பி, டிஎஸ்பிக்கள், 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நூலகப் பகுதி, விழா நடக்குமிடங்களில் மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொள்கின்றனர். மதுரையில் முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மற்றும் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் ஆய்வு செய்தனர். மதுரை வருகையையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.