இன்று பிற்பகலில் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு அனுப்பும். சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவில் சூரியன் உதிக்கும் நேரத்தைப் பொறுத்து இது மாறக்கூடும். தாமதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.
கடந்த ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திட்டம் தோல்வி காரணமாக நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க முடியும் என்ற சோதனையை நிறைவு செய்வதற்காக சந்திரயான் 3 இன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite Launch Vehicle Mark III ராக்கெட். இதை இப்போது எல்விஎம் 3 என்று அழைக்கிறார். இது ஒரு 3 ஸ்டேஜ் ராக்கெட் ஆகும். இதுதான் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது.
இன்று பிற்பகல் பூமியில் இருந்து கிளம்பி பூமியின் வட்டப்பாதையில் 179 கிமீ தூரத்தில் நிறுத்தப்படும். செல்லும் பாதையில் வரிசையாக ராக்கெட்டின் பாகங்கள் கழன்று கொள்ளும். அதன்பின் ப்ரோபல்ஷன் மாடல் அதன் மேலே ரோவர், லேண்டர் இணைக்கப்பட்ட பகுதி மட்டும் வட்டப்பாதையில் இறங்கும். இது பூமியின் வட்டப்பாதையை நீள் வட்டத்தில் சுற்றி சுற்றி 23 நாட்களில் மிக நீண்ட சுற்று வட்டப்பாதையை அடையும். அதன்பின் 23வது நாளில் ப்ரோபல்ஷன் மாடல் செயல்பட்டு நிலவை நோக்கி உந்தப்படும். அதன்பின் 7 நாட்கள் நிலவை நோக்கி இது பயணம் மேற்கொள்ளும். பின் நிலவின் வட்டப்பாதையை அடைந்ததும் 13 நாட்கள் நிலவை சுற்றும். நிலவில் இருந்து 100 கிமீ தூரத்திற்கு சென்ற பின் இந்த ப்ரோபல்ஷன் மாடல் கழன்று கொள்ளும். லேண்டர் மட்டும் ரோவருடன் இணைந்து நிலவை நோக்கி இறங்கும்.
சந்திரயான் 3 திட்டத்தில் சந்திராயன் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும். இது சந்திராயன் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திராயன் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படும் சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல். பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திராயன் 3வை கொண்டு செல்ல போவது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான். சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் (சமஸ்கிருதத்தில் “வீரம்”) என்ற பெயரிடப்பட்ட லேண்டர் உள்ளது. உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவரை நிலவில் களமிறக்க இதுதான் உதவும். பிரக்யான் (சமஸ்கிருதத்தில் “ஞானம்”), விக்ரமில் இருந்து வெளியே வரும். அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்லும். இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும்.