ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி முதல் சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்க அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டது.
இந்த ரெய்டு குறித்து இன்று சிசோடியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், “மத்திய அரசுக்கு ஊழல் குறித்து கவலை இல்லை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்துதான் கவலை” என்று கூறியுள்ளார். மேலும், ரெய்டு நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அதேபோல மார்ச் மாதம், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அவரை சிபிஐ கைது செய்தது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது சிசோடியா ஊழலில் ஈடுபட்டிருந்தபோது 14 செல்போன்கள் மற்றும் 43 சிம்கார்டுகளை பயன்படுத்தியிருந்ததாகவும், ஆனால் விசாரணை தொடங்கியபோது இவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் திகார் சிறையில் இருக்கும் சிசோடியா ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த மனு கடந்த மே மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்ளை கலைத்துவிடுவார் என்று நீதிமன்றம் அச்சம் தெரிவித்திருந்தது. மட்டுமல்லாது இது தீவிரமான வழக்கு என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த முறை அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே சிசோடியாவுக்கு ஜாமீன் தேவைப்படுவதாகவும் மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி வாதாடினார். மனுவின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பேலா எம் திரிவேதி மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. ஆனால் உடனடியாக ஜாமீன் வேண்டும் என்று சிங்வி வாதாடியதால் மனுவின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த மனு மீது கருத்து தெரிவிக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.