வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள்: ஜெயக்குமார்

வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

தமிழ்நாடு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேட்டிஅளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்தது ஏன் என்பது குறித்து சமீபத்தில் அரசு ஒரு சர்வே நடத்தியது. அப்போது ஏராளமானோர் 180 மில்லி லிட்டர் மதுவை பிரித்து குடிப்பதற்காக மதுக்கடை வாசலில் காத்திருப்பது தெரியவந்ததாக கூறினார். எனவே மது குடிப்போரின் வசதிக்காக 90 மில்லி லிட்டர் டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை தற்போது பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் பார் உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரைக்கும் கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். இதுதான் தற்போது நடைமுறையில் உள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை வேலைக்கு செல்பவர்கள் கட்டிட வேலை, கடுமையான வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு என்ன ஏற்பாடு செய்யப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர். என்ன செய்வது என்று ஆலோசித்து உள்ளோம் ஆனால் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த முத்துசாமி, டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை மாற்றும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று கூறினார். அதே போல 90 மில்லி டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

இந்த விடியா அரசு டாஸ்மாக் அரசாக மாறிவிட்டது. இது திராவிட மாடல் அரசு இல்லை.. சாராய மாடல் அரசாகிவிட்டது. டாஸ்மாக் கடைகள் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஆனால் இதில் அமைச்சர் முத்துசாமி எப்படி யூ டேர்ன் அடித்தார் பாருங்கள். காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் திறக்க கோரிக்கை வருவதாக சொன்னார். அது குறித்து யோசனை செய்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்றார். ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதும் நாங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று யு டேர்ன் அடித்து விட்டார். ஆட்சேபம் மட்டும் யாரும் தெரிவிக்கவில்லை என்றால் காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கும். அடுத்து இன்னொரு சீர் திருத்தத்தையும் கொண்டு வருகிறார்களாம். அதாவது பாட்டிலுக்கு பதில் டெட்ரா மதுபானம் வருகிறதாம். 90 எம்.எல். கொண்ட இந்த பாக்கெட்டுக்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீடுகளுக்கு செல்வார்கள். அங்கு பிரிட்ஜிலோ அல்லது எங்கேயாவது வைத்திருப்பார்கள். இதை பார்க்கும் குழந்தைகள் என்ன நினைக்கும்? ஜூஸ் பாக்கெட்டுதான் வைத்திருக்கிறார்கள் என்று அதை எடுத்து குடிக்க தொடங்கும். ஆக வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள்.

இன்னும் டாஸ்மாக்கில் 10 ரூபாய் வாங்குகிறார்கள். பில் எதுவும் கிடையாது. அந்த வருவாய் முழுவதும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே போய்க்கொண்டிருக்கிற நிலைமை இருக்கு. செந்தில் பாலாஜியை பொறுத்தவரை டெல்லிக்கு தூக்கிடுவாங்க.. உண்மையை வரவைக்கும் கருவியை வைத்து எங்கேங்கே கொடுத்துள்ளார் என்பதை சொல்லுங்க என ஒப்புதல் வாக்கும் மூலம் வாங்கிவிடுவார்கள். ஸ்டாலின் உள்பட திமுக முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைத்துக் கொட்டி பேதியாகும் நிலைமைதான் இருந்து கொண்டு இருக்கிறது.

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வத்தை தவிர வேறு யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கடிதம் கொடுத்து இணையலாம் என்று சொல்லியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக தலைமை அலுவலகத்தை அடியாட்களோடு வந்து தாக்கியவரை தொண்டர் எப்படி ஏற்றுக்கொள்வார். ஓபிஎஸ்சின் ஒவ்வொரு செயல்பாடும் திமுகவை ஒட்டியே இருக்கும் போது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதே மாதிரி சசிகலா, டிடிவி ஆகியோரும் சரி எந்த நிலையில், சேர்த்துக் கொள்ள மாட்டோம். இந்த மூன்று பேரை தவிர மற்றவர்கள் வந்தால் பொதுச்செயலாளர் அது குறித்து முடிவு எடுப்பார்” என்றார்.

அண்ணாமலை திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியது பற்றி கேட்கிறீர்கள். அண்ணாமலை வெளியிட்டட்டும். அது திமுகவை சாரும். மடியில் கனம் இருப்பவர்கள் வழியில் பயப்பட வேண்டியிருக்கும். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு இணைந்தவர்கள்தான் பட்டியலில் அதிகமாக இருப்பதாக அண்ணாலை சொல்வதாக கூறுகிறீர்கள். இருக்கட்டும். அதனால் என்ன.. உள்ளே போகட்டும். வெளியிடட்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அதில் எங்களுக்கு சந்தோஷம்தான். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.