பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு பாமக கடிதம் எழுதியுள்ளது.
பொது சிவில் சட்டம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
மருத்துவர் ச.ராமதாஸ், 16.07.1989ம் நாளில் தொடங்கிய தமிழகத்தின் தனித்துவ அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கமே தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற தமிழர், மொழி, இன, மதவாரி சிறுபான்மையர் ஆகிய அனைத்து இன மக்களின் உரிமைகள் மற்றும் பெருமைகளை நிலைநிறுத்தும் வகையிலும், சமூகநீதி தழைத்தோங்கும் வகையிலும் தன்னுரிமையுடன் கூடிய தமிழ்ச் சமத்துவ சமுதாயத்தை அமைப்பது தான். இத்தகைய உன்னத நோக்கம் கொண்ட கட்சியால் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த ஒரு மதத்தினரின், சிறப்புப் பிரிவினரின் உரிமைகளும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது. இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரின் திருமணங்கள், மண விலக்குகள், குழந்தைகளை தத்தெடுத்தல், சொத்துரிமை ஆகியவை தொடர்பாக தனித்தனியான சிவில் சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மதப்பிரிவினரின் பாரம்பரியத்திற்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட அத்தகைய சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும்; பல்வேறு மதப்பிரிவினரின் சிவில் உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பல்வேறு மாநாடுகள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் இந்த நிலையை பாமக தெளிவுபடுத்தியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய சட்ட ஆணையம் கருத்துகளைக் கேட்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதன் நோக்கம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை விட, சில பிரிவினரின், குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது. இதை பொறுப்புள்ள, மதச்சார்பற்ற கட்சி என்ற முறையில் பாமகவால் ஏற்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. அதன் காரணமாகவே பாமகவில் பொருளாளர் பதவி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. அவர்களின் உரிமைகளைக் காக்க பல போராட்டங்களை நடத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி வருகிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அதை எதிர்த்து பாமக போராடி வந்திருக்கிறது. 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும்கூட, பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பாமக எடுத்திருக்கிறது.
2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட,‘‘பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலிலும் இதையே பாமக வலியுறுத்தியது. இதே நிலைப்பாடு இப்போதும் தொடருகிறது.
இந்திய அரசியலில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரான வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் 1998 முதல் 2004 வரை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்தது. அப்போதும் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான் கூட்டணிக்கு தலைமை வகித்த பாரதிய ஜனதாவின் நோக்கமாக இருந்தது. ஆனால், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் சேர்க்கச் செய்து அதனடிப்படையில் தான் கூட்டணி அரசுக்கு பாமக ஆதரவு அளித்தது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றியமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அம்முயற்சி வெற்றி பெறவில்லை. காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகவும் வலிமையாக உள்ளது. இந்திய மக்களிடையிலான மத நல்லிணக்கம் அதை விட மிகவும் வலிமையாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்தியர்கள் அதை சிதைக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சிறுபான்மை சமூகங்களுக்கான சிவில் சட்டங்களில் குறைகளே இல்லை என்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக இஸ்லாமிய மக்களிடம் நடைமுறையில் இருந்த முத்தலாக் போன்ற வழக்கங்கள் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பறிக்கும் வகையில் இருந்தன. அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை ரத்து செய்தது. அதேபோல், வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைக் குறிப்பிட்டு கருத்து கேட்கலாம். அவ்வாறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் கூட, அவற்றை இந்திய ஜனநாயத்தின் மூன்று தூண்களில் ஒன்றான உச்சநீதிமன்றம் சரி செய்யும். அவ்வாறு இருக்கும் போது எந்தக் காரணத்தையும் கூறாமல், எந்தத் தேவையும் இல்லாமல் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆணையம் கருத்துக் கேட்பது தேவையற்றதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44ம் பிரிவில், ‘‘இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருப்பது தான் பல்வேறு சட்ட ஆணையங்கள் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கும், கருத்து கேட்பதற்கும் அடிப்படை ஆகும். ஆனால், உண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44ம் பிரிவு என்பது வழிகாட்டி பிரிவு தானே தவிர கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பிரிவு அல்ல என்ற உண்மையை இந்திய சட்டம் ஆணையம் நன்றாக அறிந்திருக்கும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 47ம் பிரிவு ஒன்று உள்ளது. அதுவும் அரசுக்கு வழிகாட்டும் பிரிவு தான். அதில், ‘‘ஓர் அரசின் கடமை என்பது மக்களின் ஊட்டச்சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவது ஆகும். மக்களின் ஊட்டச்சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவதை அரசு முதன்மைக் கடமையாக கருத வேண்டும். குறிப்பாக மதுவையும் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் போதைப் பொருட்களையும் மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்’’ என்று மதுவிலக்குக் கொள்கை மிகவும் தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
44ம் பிரிவின்படி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தும் சட்ட ஆணையங்கள், இன்று வரை 47ம் பிரிவின்படி இந்தியாவில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த ஆய்வும் நடத்தாமல் இருப்பது பெரும் புதிராகவே இருக்கிறது. இத்தனைக்கும் தனித்தனி சிவில் சட்டங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை. ஆனால், மதுவால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கின்றனர். ஆண்டுதோறும் 20 லட்சம் மக்கள் உயிரிழப்பதை தடுப்பதற்கான மதுவிலக்கு குறித்து எந்த விவாதமும் நடத்தப்படாத நிலையில், பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்திற்கு மட்டும் இந்திய சட்ட ஆணையம் இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதே ஐயங்களை ஏற்படுத்துகிறது.
தனி சிவில் சட்டங்களால் இஸ்லாமியர்கள் மட்டும் பயனடைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வதே தவறாகும். தனி சிவில் சட்டங்கள் பெரும்பான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் தனித்தனியாக உள்ளன. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் திருமணம் தொடர்பான சடங்குகளையும் பொது சிவில் சட்டம் சிதைத்து விடும் என்பதை சட்ட ஆணையம் உணர வேண்டும்.
பொதுசிவில் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ம் சட்ட ஆணையம் விவாதித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டது. அதன் முடிவில் 185 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை 2018ம் ஆண்டில் வெளியிட்டது. அதில், இன்றைய சூழலில் பொதுசிவில் சட்டம் தேவையும் அல்ல; விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்திருந்தது. ‘‘ஒருங்கிணைந்த நாடு என்பதற்காகவே அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. மதச்சார்பற்ற தன்மை என்பது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் பன்முகத்தன்மையுடன் முரண்பட்டதாக இருக்கக்கூடாது. கலாச்சார பன்முகத்தன்மை என்பதில் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளக் கூடாது. ஒற்றைத் தன்மை அல்லது ஒரே மாதிரியான தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான வெறி தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தலாக மாறுகிறது’’ என்று 21ம் சட்ட ஆணையம் அதன் அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது.
இவ்வளவுக்குப் பிறகும், 4 ஆண்டு இடைவெளியில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை 22ம் சட்ட ஆணையம் தொடங்கியிருப்பது சரியல்ல என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.