மணிப்பூர் வன்முறையால் பற்றி எரியும் நிலையில், பிரதமர் இது குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3000திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இன்னும் 60 ஆயிரம் பேர் அங்குள்ள 340 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‘காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பு’ என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது நேரத்தை அதன் உள் பிரச்னைகளில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடி பிரான்சில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பாஸ்டில் நாள் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருந்தார். அங்கு அவருக்கு உயரிய விருது கொடுத்து கவுரவப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மணிப்பூர் பற்றி எரிகிறது. உள்நாட்டு விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் விவாதிக்கிறது. பிரதமரோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இதற்கிடையில் பாஸ்டில் நாள் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.