இந்திய பகுதிகளை பாகிஸ்தான், சீன பகுதிகளாக சித்தரிப்பதா?: காங்கிரஸ் கண்டனம்!

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி, உலகத்தை பார்ப்பதுபோல் ஒரு அனிமேஷன் வீடியோவை பா.ஜனதாவும், அதன் தலைவர்களும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர். அதில், இந்திய வரைபடமும் இடம்பெற்றுள்ளது. ஆனால், சில இந்திய பகுதிகளை பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இருப்பதுபோல் அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீதான தாக்குதல். இந்த தவறை பொதுமக்கள் சுட்டிக்காட்டியவுடன், பா.ஜனதா தலைவர்கள் அந்த வீடியோவை நீக்கி விட்டனர். அதற்காக நாங்கள் பிரச்சினை எழுப்பாமல் இருக்க முடியாது.

இந்திய வரைபடத்தை தவறாக சித்தரித்தால் ரூ.100 கோடி அபராதம், 7 ஆண்டு சிறைத்தண்டனை என்று பா.ஜனதாதான் மசோதா கொண்டு வந்தது. எனவே, இத்தவறுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.