அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான தீர்ப்பு இறுதியாகவில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்று வரை இணையதளத்தில் உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி புகார் மனு அளித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிராக பல்வேறு வழக்குகளை ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்தது. இந்த வழக்குகளில் ஓ பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவே ஏற்பட்டது. இதையடுத்து, உள்கட்சி தேர்தலை நடத்திய எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடமும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்தது. இந்த திருத்தங்களை அண்மையில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது.
நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்ற நிபந்தனையுடன் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் இது தொடர்பாக இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்டது. இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இனி அதிமுகவுக்கு உரிமை கோருவதில் அர்த்தம் இல்லை என்கின்றனர்.
ஓபிஎஸ்- தரப்பின் அதிமுகவுக்கு உரிமை கோருகிற போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்க வேண்டும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனினும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒருவேளை தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்தால் நிலைமை மாறும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி புகார் மனு அளித்துள்ளார். அதிமுக தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான தகவலை பரப்புவதாகவும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தீர்ப்பு இறுதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்று வரை இணையதளத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அனுப்பிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்குகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் தான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.