ஜெகன் மோகன் ரெட்டி மனைவியின் சொத்துக்களை முடக்கிய விவகாரம்: அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மனைவியின் சொத்துக்களை முடக்கிய விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவியான பாரதி ரெட்டி, மிகவும் பிரபலமான பாரதி சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இந்த நிறுவனம் மீதான முறைகேடு வழக்கில் பாரதி ரெட்டியின் ஒரு சில சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. ஆனால் குற்றச்சாட்டிற்கு தொடர்பு இல்லாத சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக கூறி பாரதி ரெட்டி தெலங்கானா உயர்நீதிமன்றத்தை நாடினார். பாரதி ரெட்டி தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், சம்மந்தப்பட்ட சொத்துக்களை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக மாற்றி கொள்ள அனுமதி அளித்தது.

இந்த நிலையில் தெலங்கானா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக் காட்டி, வழக்கிற்கு தொடர்பு இல்லாத சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக பாரதி ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதனை மறுக்கமுடியாத அமலாக்கத்துறை, பாரதி சிமெண்ட் நிறுவன முறைகேட்டின் மதிப்பும் முடக்கப்பட்ட சொத்தின் மதிப்புக்கு இணையானது என வாதிட்டது. ஆனால் அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்காத நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.