மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவை சேர்ந்த அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். இது தொடர்பான அரசியல் நெருக்கடியின் போது சிவசேனா கட்சியின் தலைமை கொறடாவாக இருந்த சுனில் பிரபு, அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் அளித்தார். மேலும் மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பாக சிவசேனாவின் இரு அணிகளும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தது. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய மறுத்த கோர்ட்டு, இதுகுறித்து மராட்டிய சபாநாயகர் ராகுல் நர்வேகர் நியாயமான காலத்திற்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தற்போது உத்தவ் தாக்கரே அணியில் உள்ள சுனில் பிரபு, முதல்-மந்திரி ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி சபாநாயகர் ராகுல் நர்வேகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க நோட்டீஸ் குறித்து விரைவாக முடிவெடுக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் ராகுல் நர்வேகரின் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தவ் சிவசேனா வலியுறுத்தி உள்ளது.