ஜூலை 19ஆம் தேதி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: அன்பில் மகேஷ்

நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுக்க விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஜூலை 15ஆம் தேதி ‘விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுக்க உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் தொடங்கப்பட்ட உள்ளது. இந்த அறிவிப்பு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

காமராஜர் பிறந்த நாளை போற்றும் வகையில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடப்பது வழக்கம். அதன்படி நாளைய தினம்(இன்று) பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். நாளை மதுரை செல்லும் முன்பு, பள்ளியில் நடக்கும் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வில் முதல்வரும் கலந்து கொள்ள உள்ளார். வரும் 19ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஒவ்வொரு பள்ளியிலும் மேலாண்மை குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.

10, 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதாதவர்கள் அல்லது எழுதி தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், பெற்றோருக்கு வணக்கம்.. தமிழக குழந்தைகள் மீது அக்கறை உள்ள பெற்றோர் என்ற நிலையில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அம்மாநில மக்கள் பெற்றுள்ள கல்வி அறிவு பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் அறிவார்ந்த சமூகத்தை அமைக்கும் நடவடிக்கைகளும் திட்டங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் குழந்தைகளுக்கு கற்றல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி தொடங்கிச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மிகச் சிறந்த ஆற்றல் மிகுந்த இளைஞர்களை உருவாக்க நான் முதல்வன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. சமூக நிதியைக் காப்பதில் முன்னணி மாநிலமாக இருப்பதும் அனைவருக்கும் தெரியும். சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் வல்லமை கல்விக்கே இருக்கிறது. அப்படியிருக்கும் போது நமது மாணவர்கள் சிலர் 10ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடராமல் இருப்பதை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நமது குழந்தைகளின் உயர்கல்வி என்பது அவர்களின் உரிமைகளில் ஒன்று. அவர்கள் விரும்பிய பாடங்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது நமது கடைமை. அவர்களின் கல்வியைத் தொடர தடையாக இருக்கும் விஷயங்களை நாம் தகர்த்து எறிவோம். அதன்படி பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் அதே போன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை அந்த கடிதத்தின் வாயிலாகத் தெரிவிக்கிறோம்.

தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் மீண்டும் தேர்வு எழுத முயற்சி செய்ய வேண்டும். வரும் ஜூலை 19ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு நடக்கும் நிலையில், அப்போது உயர்கல்வி குறித்த வழிகாட்டக் குழுமும் உங்களுக்காகக் காத்திருக்கும். 8ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட ஐடிஐ கல்வி நிறுவனத்திலும் 10ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் பாலிடெக்னிக் கல்வியைத் தொடரலாம். பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளின் உயர் கல்வியை உறுதி செய்ய ஜூலை 19ஆம் தேதி அவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார்.

தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பயிலகம் தொடங்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “நல்ல விஷயம் தானே.. மாணவர்களுக்காகச் செய்கிறார். இது நல்ல விஷயம் தான். இல்லம் தேடி கல்வியின் கான்செப்ட் இதுதான். கொரோனாவால் கல்வி பாதித்தவர்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இதற்குத் தனியாக தன்னார்வலர்களும் உள்ளனர். அவர் செய்தால் அதுவும் நல்ல விஷயம் தான்” என்றார்.