செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது: கே.எஸ்.அழகிரி

செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட, வேறு வகையில் அவருக்கு மரியாதை செய்ய முடியாது. தொழில் துறை, அணைக்கட்டுகள், விவசாய மேம்பாடு, அனைத்து கிராமங்களிலும் கல்வி என தமிழகத்தின் வளர்ச்சிக்கு உயிர் நாடியாக, உறுதுணையாக இருந்தவர் காமராஜர்.

அவரது வழிக்காட்டுதலே தமிழகம் கல்வியில் முன்னேறியதற்கு முக்கிய காரணம். 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு ஒரு புதியத் திட்டத்தைக் கூட கொடுக்கவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார். செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது.

நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை என பல்வேறு திட்டங்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனினும் 80 சதவீத பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். ஒரு திட்டம் தொடங்கும்போதே குறை சொல்லக் கூடாது. குறைபாடுகள் இருந்தால் முதல்வர் நிவர்த்தி செய்வார். திட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர். நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை. சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியாது என்பதால், ஜாதியை சொல்லி வெற்றிப் பெறுவதற்கு திட்டமிட்டு வருகிறார். பல மதங்கள், ஜாதிகள், மொழிகள் கொண்ட இந்தியாவில் ஒரே சட்டம் என்பது சாத்தியமில்லை. நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றை சொல்லி, அதானி, அம்பானி தொடர்பான விவகாரங்களை மறைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.