பெங்களூருவில் நாளை நடக்கும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை என்றும் மறுநாள் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் மம்தா தெரிவித்து உள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிடுவது குறித்து பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 23ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் பெங்களூருவில் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள 24 கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்து உள்ளார்.
ஜூலை 17ல் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா சார்பில் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது காலில் ஏற்பட்ட காயம் தொடர்பாக மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் முழுவதும் 18ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.