2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மராட்டிய அரசு ‘ஷாசன் அப்லியா தாரி'(உங்கள் வீட்டு வாசலை தேடி அரசு) என்ற திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ஒன்றை சாளர முறையின் கீழ் தேவையான ஆவணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களின் பலன்களை ஒரே இடத்தில் பெற முடியும். நாசிக்கில் நேற்று ‘ஷாசன் அப்லியா தாரி திட்டத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பேசியதாவது:-
மராட்டியத்தில் எங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர். இருப்பினும் யாருக்கும் பாரபட்சமோ அல்லது அநீதியோ இழைக்கப்படாது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைய முயன்றாலும், அவர்களால் ஒரு தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. இது பிரதமர் மோடியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. அஜித்பவாரும் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் பாராட்டுகளை பெறுகிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 முறை உரையாற்றும் வாய்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்தது. சமீபத்தில் பிரான்சின் உயரிய கவுரவ விருதுஅவருக்கு வழங்கப்பட்டது.
தேசியவாத காங்கிஸ் கட்சி தலைவர் அஜித்பவார் ஆளும் அரசில் இணைந்ததன் மூலம், மாநில அரசு மேலும் வேகமாக செயல்பட தொடங்கி உள்ளது. முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகிறது. துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எனது நல்ல நண்பர் மற்றும் பெரிய இதயம் படைத்தவர். அவர் முன்பு முதல்-மந்திரியாக இருந்தார். நாங்கள் இணைந்து வேலை செய்தோம். தற்போது அவர் துணை முதல்-மந்திரியாகவும், நான் முதல்-மந்திரியாகவும் இருக்கிறேன். இந்த நிலையில் அவர் மற்றொரு துணை முதல்-மந்திரியாக அஜித்பவாரை ஏற்றுக்கொண்டுள்ளார். அவரை சிலர் களங்கம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் ஒரு களங்கமற்ற தூய்மையான அரசியல்வாதி. இவ்வாறு அவர் கூறினார்.