மழை வெள்ளத்தில் உயிர் தப்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!

பஞ்சாப்பில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஆம்ஆத்மி முதல்வர் பகவந்த் மான் பயணித்த கப்பல் திடீரென குலுங்கி கவிழ்வது போன்ற சென்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினா்.

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ஆம்ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில் டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதில் அந்த மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ளத்துக்கு பஞ்சாப்புக்கும் விதிவிலக்கல்ல. ஏனென்றால் கடந்த சில நாட்களாக பஞ்சாப்பின் பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதில் ஜலந்தர் மாவட்டம் பெரோஷ்பூர் அருகே உள்ள பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய முதல்வர் பகவந்த் மான் சிறிய வகை கப்பலில் சென்றார். இந்த கப்பல் ஜலந்தர் மாவட்டம் பெரோஷ்பூர் அருகே உள்ள நிஹாலா லாவெரா மற்றும் கிதார்பிண்டி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கப்பல் குலுங்கியது. அதாவது சூறைக்காற்றில கப்பல் சிக்கும்போது கப்பல் அங்கும், இங்கும் ஆடுவது போல் அவரது கப்பல் குலுங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அடுத்த சில வினாடிகளில் கப்பல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் கப்பலில் பயணித்த முதல்வர் பகவந்த் மான் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே கப்பல் குலுங்கியதன் பின்னணியில் உள்ள காரணம் வெளியாகி உள்ளது. அதாவது வெள்ள ஆய்வு பணியின்போது முதல்வர் பகவந்த் மானுடன் உயர் அதிகாரிகள் சென்றனர். அவர்களின் எண்ணிக்கை என்பது கப்பலில் அதிகமாக இருந்தது. இந்த வேளையில் கப்பலின் ஒரு பகுதியில் அதிகமான அதிகாரிகள் நின்ற நிலையில் கப்பல் குலுங்கியதாக கூறப்படுகிறது.