அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது: ஜி.கே.வாசன்

அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. வாக்களித்த மக்களை ஏமாற்றுவதை மக்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள். ஆனால் அதை செய்யாமல் மாணவ-மாணவிகளை அச்சப்படுத்துகிறார்கள். நீட் தேர்வில் நம் மாணவர்கள் வெற்றி பெற அறிவுக்கூர்மையை மேம்படுத்த வேண்டும். பெண்களுக்கு ரூ.1,000 என்று அறிவித்து விட்டு 2½ ஆண்டுகளுக்கு பின்னர் அதையும் சரியாக கொடுப்பார்களா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. பெண்களுக்கு ரூ.1,000 தர முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்.

மாதத்துக்கு ஒரு முறை மின் அளவீடு என்பது நடைபெறவில்லை. சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கோரிக்கை வைத்தது. இன்னும் 7 மாதங்களில் பொங்கல் வருகிறது. குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் முதலில் போராட்டம் நடத்தும் இயக்கமாக த.மா.கா. இருக்கும். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இவ்வாறு அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது. இனிமேல் ஏமாந்து விடக்கூடாது என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

சொத்து வரி, மின்சார கட்டணம், பால்விலை என்று அனைத்தையும் உயர்த்தி விட்டது. தமிழகத்தில் அனைத்து நிலையிலும் போதை தலைவிரித்தாடுகிறது. 2 ஆண்டுகளாக அதை தடுக்க முடியாமல் தமிழக அரசு தடுமாறுகிறது. சட்டம்-ஒழுங்கு சீர் குலைவுக்கு டாஸ்மாக் மட்டுமே காரணம். தமிழகத்தில் நடப்பது டாஸ்மாக் மாடல் ஆட்சியாக உள்ளது. அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கர்நாடகா துணை முதல்-மந்திரி காவிரி தண்ணீர் தர முடியாது என்கிறார். இந்த விஷயத்தில் கூட்டணி, அரசியல் என்று தமிழக விவசாயிகளுக்கு எதிராக இருந்தால் த.மா.கா. போராட்டம் நடத்தும்.

அ.தி.மு.க.-பா.ஜனதா, த.மா.கா. மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க வேண்டும். பிரதமர் மோடி நல்லாட்சி நடத்துகிறார். இந்தியா உயர வேண்டும் என்ற ஒரே நல் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. பிரதமர் மோடியின் நல்லாட்சியில் இந்தியா வல்லரசாக மாறும். இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.