டெல்லியில் வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இமாசல பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது. டெல்லியில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வெள்ளம் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. யமுனை நதிக்கரையோரம் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ராஜ்காட் பகுதி, டெல்லி சட்டசபை பகுதி, செங்கோட்டை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள சாலைகளில் கூட தண்ணீர் தேங்கி உள்ளது. யமுனை நதியின் கரையோரம் வசித்த மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். R

இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

யமுனை ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சில குடும்பத்தினரின் வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லபப்ட்டது. வெள்ளத்தால் ஆவணங்கள் இழந்திருந்தல் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும். டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவியாக அளிகப்படும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.