தக்காளி விலை ஏற்றம் குறித்து ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை: எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தக்காளி விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள கேர் கல்லூரியில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை சங்கமம் 2023 என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதையொட்டி கேர் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது:-

இந்த விழாவில் விவசாயத்திற்கு எளிமையாக லாபம் தரக்கூடிய நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு லாபத்தை தரக்கூடிய பயிற்சிகள் இங்கு வழங்கப்பட இருக்கிறது. வடமாநிலங்களில் அதிகளவு மழை பெய்ததன் காரணமாக வரத்து குறைந்து தக்காளி விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு நடவடிக்கையால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் விலை குறைவாக உள்ளது. உழவர் சந்தை மற்றும் கூட்டுறவு துறை மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை ஏற்றம் குறித்து ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.