முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை: ஜெயக்குமார்

முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை என்றும், அமலாக்கத்துறை எப்போது நமது வீட்டுக்கு வரும் என்ற கவலைதான் இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வது போல இப்போது முதல்வரும் அமைச்சர்களும் ஈடி (அமலாக்கத்துறை) வந்து விட்டதா, இன்கம் டேக்ஸ் வந்து விட்டதா யார் வந்து இருக்கா என்றுதான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நிர்வாகத்தில் இப்போது அவர்கள் கவனம் செலுத்தவில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வழிமுறையைதான் தேடுகிறார்கள். முதலில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஆரம்பித்தது.. இப்போ பொன்முடிக்கு ஆரம்பித்தது.. அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆரம்பிக்க போகிறது.. பொன்முடிக்கு இரவெல்லாம் தூக்கம் இருக்காது. அவரை பொறுத்தவரை எப்போ கைது ஆவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின் தூக்கத்தை எல்லாரும் அமைச்சர்களும் கெடுத்தது போல இன்னைக்கு எல்லா அமைச்சர்களும் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தூக்கம் இல்லாமல் இருக்கும் ஒரு கேபினட் தான் இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை.

செந்தில் பாலாஜி சிறைக்கைதி. அவரை நீக்குவதுதான் முறை. அந்த அடிப்படையில் தான் ஆளுநரிடம் மனு கொடுத்தோம். செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதில் என்ன பிரச்சினை. ஏன் அமைச்சர் என்ற ஷீல்டு இன்னும் வைத்து இருக்கிறீர்கள். தெண்ட செலவு எதற்கு? செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு கொடுப்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் வீட்டில் இருப்பது போல எல்லா வசதியும் கொடுத்தால் அது தவறு. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு காவிரி பற்றியோ முல்லை பெரியாறு பற்றியோ கவலை கிடையாது. மேகதாது பற்றியோ கவலை கிடையாது. அவருக்கு கவலை எல்லாம் அமலாக்கத்துறை எப்போது நம்ம வீட்டுக்கு வரும்.. வருமான வரித்துறை எப்போது நம்ம வீட்டுக்கு வரும், ஆட்சி எப்போது கலையும் என்ற கவலைதான் அவருக்கு உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.