பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழக பாஜகவினர் முதல்வர் ஸ்டாலினின் இந்த பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என தீர்க்கமாக கூறி வருகிறது. இந்நிலையில் கார்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றிருப்பதை கண்டித்து தமிழக பாஜக நிர்வாகிகள் அனைத்து அமைப்பு மாவட்டங்களிலும் மொத்தம் 66 இடங்களில் கறுப்பு சட்டை அணிந்து செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
கர்நாடகா மாநில காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக மேகதாது அணையைக் கட்ட முயற்சிப்பது மற்றும் கடந்த சில மாதங்களாக, தமிழகத்துக்கான காவிரி நீர் பங்கீடைச் சரிவர வழங்காமல் கர்நாடக அரசு புறக்கணிப்பது ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், கொள்கையற்ற சுயநலக் கூட்டணிக்காக, தமிழக விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் திறனற்ற திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள 66 தமிழக பாஜக அமைப்பு மாவட்டங்களிலும், ஊடக சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக விவசாயிகள் கர்நாடக காங்கிரஸ் அரசால் வஞ்சிக்கப்படும் அதே நேரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் விருந்து உண்டு கொண்டிருக்கின்றனர். தமிழக விவசாயிகள் மீதான இவர்கள் பற்று இவ்வளவுதான். தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, எப்படி கருணாநிதி, ஆட்சியில் இருக்கும்போது காவிரி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டு, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தைச் சட்டப் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளினாரோ, அதேபோல தற்போதும், கர்நாடக காங்கிரஸ் ஆட்சியின் தமிழக விரோத நடவடிக்கைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள், பாதிக்கப்படப் போவது தமிழக விவசாயிகள்.
விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எப்படி கவலை இருக்கும்? உங்கள் அனைவருடனும் இணைந்து, இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக அளவிலான அரசியல் கட்சிகளின் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதால், என்னால் தமிழக பாஜக சகோதர சகோதரர்களுடன் இணைந்து பங்கேற்க இயலவில்லை. என் எண்ணங்கள் முழுமையாக உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கிறது. திமுகவின் தமிழர் விரோதப் போக்கை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.