பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை முன்மொழிந்தது யார் என்பது குறித்து செய்தியாளர்களிடம் தொல் திருமாவளவன் பேசினார்.
பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் இந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல் திருமாவளவன் கூறியதாவது:-
இன்று நடைபெற்ற கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது. 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். 7 மாநில முதல்வர்கள் பங்கேற்றார்கள். மனம் திறந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். மம்தா பானர்ஜி இந்தியா என்ற பெயர் வரும் வகையில் பெயரை முன்மொழிந்தார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மம்தா பானர்ஜி அளித்த பெயரை சரி என்று வழிமொழிந்தார். ராகுலும் இதையே கூறினார். கடைசியில் அனைவரும் ஒருங்கிணைந்து INDIA என்ற பெயரிலேயே இந்த கூட்டணியை அமைப்பது என்ற ஒருமித்த முடிவு மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது. மோடி என்னுடைய இந்தியா என்று உரிமை கோருகிறார். குறிப்பிட்ட சமூகத்தின் இந்தியா என உரிமை கோருகிறார். இது மக்களுக்கான இந்தியா, அனைவருக்குமான இந்தியா என்று சொல்லக்கூடிய வகையிலே இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று கார்கே அறிவித்து இருக்கிறார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
நிதிஷ் குமார் இன்னும் சில கட்சிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக சிதறிப்போன கூட்டணியை ஒட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணி பெயரளவில் தான் உள்ளது. 10 ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட என்.டி.ஏ என்ற பெயரில் கூட்டத்தை கூட்டியதே இல்லை. ஆகவே மறுபடியும் உயிரூட்டுவதற்கான முயற்சியாகத்தான் டெல்லியில் இந்தக் கூட்டத்தை கூட்டியிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.
பொது சிவில் சட்டத்தை வரும் கூட்டத்தொடரில் பாஜக அறிமுகம் செய்தால் ஒருங்கிணைந்து அதை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்மொழிந்து இருக்கிறோம். பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை. முதலில் இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுவாக்க வேண்டும். மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். ஆகவே அது பற்றிய விவாதம் இப்போது எழவில்லை. கூட்டணி உருவானதே வெற்றிதான். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது என்று கனவு கண்டு கொண்டு இருந்தார்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி இருப்பதே எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்து இருக்கும் முதல் வெற்றி. மகத்தான வெற்றியாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பெரிய அளவில் விவாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.