எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தது தவறு என்று கூறிய குமாரசாமி, காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த 16-ந் தேதி அன்று இரவு முதலே தலைவர்கள் பெங்களூருவுக்கு வர தொடங்கினர். அவர்களை வரவேற்று, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க கர்நாடக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறாக மொத்தம் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கர்நாடக அரசு நியமித்து இருந்தது.
இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளிநாட்டு மாநிலங்களில் இருந்து வந்த அரசியல்வாதிகளுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த செயலுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இது அதிகார துஷ்பிரயோகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசியல்வாதிகளுக்கு சேவை செய்ய வைத்ததன் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்தின் பெருமை, பாரம்பரியம், சுயமரியாதை ஆகியவற்றுக்கு அஞ்சலி செலுத்திவிட்டனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசு செய்தது தவறு. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இவ்வாறு நடந்து கொள்வது தானா?. இது கர்நாடக அரசு நிகழ்ச்சி இல்லை. புதிய அரசு பதவி ஏற்கும் நிகழ்ச்சி அல்ல. கேவலம், அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டம் அவ்வளவு தான். இந்த கூட்டத்திற்கு வந்த அரசியல் தலைவர்களுக்காக விருந்தோம்பல் கொடுக்கும் பொறுப்பை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கியது 6 கோடி கன்னட மக்களை கேவலப்படுத்தும் செயல். இது கர்நாடக அரசுக்கும் பெரும் அவமானம் ஆகும். கர்நாடக அரசு சந்தித்த மிகப்பெரிய சோகமான நிகழ்வு இது.
சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற வைத்த கன்னட மக்களிடம் காங்கிரஸ் தனது அதீத ஆணவத்தை காட்டி உள்ளது. சத்ய யுகத்தில் இரன்யகசிபு அஷ்டதீபகலசத்தை கைப்பற்றினார். ஆனால் அதன் காரணமாகவே அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசியல்வாதிகளின் ‘கேட் கீப்பர்’களாக பயன்படுத்தி காங்கிரஸ் அதன் அழிவை தானே தேடிக்கொண்டது. காங்கிரஸ் கட்சி அரசியல் மற்றும் நிர்வாகத்தை எவ்வாறு நடத்துவது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஏற்படுத்திய அவமானத்தின் மூலம் நாட்டுக்கு புதிய வழியை அறிமுகம் செய்துள்ளது. காங்கிரஸ் எப்போதும் தனது கீழ்த்தரமான செயல் மூலம் கீழ்த்தரமாகவே இருந்து வருகிறது. இத்தகைய ஆபத்தான கைகள் தான் கை கட்சியினரின் சொத்து. இவ்வாறு குமாரசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், ‘இது ஒரு கலாசாரம். பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரிகள் பெங்களூருவுக்கு வந்தனர். அவர்கள் பெங்களூருவிற்கு விருந்தாளிகளாக வந்தனர். அவர்களை வரவேற்று மரியாதை அளிக்கவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதைவிடுத்து அதிகாரிகளுக்கு வேறு எந்த பணியும் மாநில அரசால் கொடுக்கப்படவில்லை. இந்த ஒரு கலாசாரத்தை முந்தைய அரசுகளும் பின்பற்றி உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.