குஜராத் கலவர வழக்கு: தீஸ்தா சீதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தீஸ்தா சீதல்வாட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை கடந்த ஆண்டு (2022) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை எதிர்த்து சீதல்வாட் உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காரணமாக போலீஸ் மற்றும் நீதிமன்றக் காவல் முடிந்ததுமே தீஸ்தா விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் அவர் வழக்கமான ஜாமீன் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தை அவர் நாடினார். நீதிபதிகள் பிஆர் கவாய், ஏஎஸ் போப்பண்ணா, திபாங்கர் தத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, குஜராத் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கியது. வழக்கின் விசாரணையை ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி அந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீஸ்தா சீதல்வாட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில், ‘தீஸ்தாவின் பாஸ்போர்ட் விசாரணை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட வேண்டும். அவர் சாட்சிகளின் மீது எந்தவித ஆளுமையும் செலுத்த முயலக் கூடாது. குஜராத்தில் இருக்கும் பெரும்பாலன சாட்சிகளிடமிருந்து அவர் விலகியே இருக்க வேண்டும். இவற்றில், எதையாவது தீஸ்தா மீறினார் என்றால், அவரது ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தை குஜராத் போலீஸ் நாடலாம்’ என்று கூறியுள்ளது.