பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதாவுக்கு எதிராக இலங்கையில் பல்வேறு விமா்சனங்கள் எழுந்த நிலையில், அந்தச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும் என இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தாா்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்-1979 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு மாற்றாக பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதா குறித்த அறிவிப்பை இலங்கை அரசு கடந்த மாா்ச் மாதம் வெளியிட்டது. எதிா்க்கட்சிகள், சிறுபான்மையினா் உள்ளிட்டோா் இந்த மசோதாவைக் கடுமையாக விமா்சித்திருந்தனா்.
இந்நிலையில், அதிபா் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இது குறித்து இலங்கை அதிபா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதா, வரைவு குழுவால் மறுஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் பொதுவெளியில் வெளியிடப்படும் என தமிழ்க் கட்சிகளிடம் அதிபா் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தாா். உள்நாட்டு போரின்போது ராணுவத்தினா் மேற்கொண்ட உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியும் வகையில் இடைக்கால செயலகம் அமைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். மேலும், தேச ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் அதிபா் தெரிவித்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கட்சிகளுடனான கூட்டத்தில் 13-ஆவது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அதிபா் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தாா். மாகாண பட்டியலில் உள்ள காவல் துறை தவிா்த்து அனைத்து பிரிவுகளின் மீதான அதிகாரமும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் பொதுப் பட்டியலில் உள்ள சில பிரிவுகள் மீதான அதிகாரமும் மாகாணங்களுக்கு வழங்கப்படும் என அதிபா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1987-இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் 13-ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழா்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதிகாரப் பகிா்வுக்கு இந்தத் திருத்தம் வழிவகை செய்கிறது.