பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேரந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜக சட்டமன்றக் குழு தலைவரும், பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி தமிழ்நாடு மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக செயல்பட்டு வருகிறார். இவர் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்தது. அவர் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது உறுதியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் உள்ள சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை நயினார் பாலாஜி மோசடியாக ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்து முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர், இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவித்துள்ளதாகவும், இது தற்போது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்தது. இந்த புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரித்து, ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவுத்துறை தலைவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஸ்ரீ நயினால் பாலாஜியால் மோசடியாக பதியப்பட்ட ரூ. 100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலம் தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவி வருகிறது. பலர் இது தங்கள் சொத்து என்று உரிமை கோரி வருகின்றனர். 2006ஆம் ஆண்டு சரஸ்வதி என்பவரின் பெயரில் இருந்து சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோருக்கு விற்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோர் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகப்பிரிவினை பத்திரத்தை பதிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது வரை இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் தான், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி இந்த இடத்தை நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த வழக்கில் தொடர்புடைய இளையராஜாவும், நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜியும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை கடந்த 2022 ஜூலை 23 ஆம் தேதி பதிவு செய்து, நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு சில சொத்துக்களையும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சொத்துகளையும் சேர்த்து போலியான முறையில் பத்திரப்பதிவைச் செய்துள்ளனர். இந்த நிலம் குலாப்தாஸ் நாராயண் என்பவரின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும், இளையாராஜா தான் இந்த சொத்துக்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜெண்ட் எனக் கூறி, அவரிடமிருந்து நயினார் பாலாஜி நிலத்தை வாங்குவதாக ஒப்பந்த பத்திரப் பதிவு செய்துள்ளனர். அப்போது ராதாபுரம் சார் பதிவாளராக இருந்த சரவண மாரியப்பன் இந்த பத்திரப்பதிவைச் செய்துள்ளார்.
இதனையடுத்து அறப்போர் இயக்கம் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக புகார் கூறி இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தது. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக இது போல மிகப்பெரிய மதிப்பு உள்ள சென்னை நிலத்தை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. சர்ச்சைக்குரிய நிலத்துக்கு சொந்தக்காரரான குலாப்தாஸ் நாராயண் 1946ல் மகாராஷ்டிராவில் இறந்ததாக ஒரு இறப்பு சான்றிதழை இளையராஜா கொடுத்துள்ளார். ஆனால் குலாப்தாஸ் 1944 இல் சென்னையில் இறந்ததாக இறப்பு சான்றிதழ் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ளது. இதையடுத்து ஸ்ரீ நயினார் பாலாஜி, மற்றும் இளையராஜா ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெளிவானது. பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் அதிரடியாக பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மோசடி பத்திரப்பதிவு புகார் விசாரிக்கப்பட்டு உறுதியான நிலையில் நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.