அடுத்த கேபினட் மீட்டிங் ஜெயில்ல தான் நடக்கும் போல: ஜெயக்குமார்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அடுத்த அமைச்சரவை கூட்டத்தை ஜெயிலில் தான் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், திமுக அமைச்சர்களின் ஊழலை தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்கள் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுகவினர் கேரட், வெண்டக்காய், பச்சை மிளகாய், தக்காளியால் செய்யப்பட்ட மாலையை அணிந்துகொண்டு ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். மேலும் அதிமுக மகளிர் அணியினர், பாடை கட்டி, அதன் மீது காய்கறிகளை வைத்து பால் ஊற்றி ஓப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

சென்னை மாநகரம் கொலை நகரமாக மாறியுள்ளது. இதை தடுக்காமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஜனநாயக விரோத செயலில் அரசு ஈடுபடுகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இதுபற்றி எல்லாம் அறியாத முதலமைச்சர், ஆசியாவிலேயே தன் குடும்பத்தை பணக்கார குடும்பமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். மேலும், விடியல் விடியல் என்று சொல்லி, விடிந்ததும் சாராயம் கொடுக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது. முத்துசாமி அதிமுகவில் இருந்தபோது நன்றாக இருந்தார். இன்றைக்கு ஏதோ காலைல குடிக்குறவன் குடிகாரன் இல்லையாம், மாலையில குடிக்குறவன் தான் குடிகாரன் என்கிறார். 7 மணிக்கு கடை திறப்பேன் என்றார், அப்புறம் இல்லை என்கிறார்.

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர்கள் ஓவ்வொருவராக விசாரணை வளையத்துக்குள் வருவதை பார்த்தால் அடுத்த அமைச்சரவை கூட்டத்தை சிறையில் தான் நடத்தவேண்டிய சூழல் ஏற்படும். திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என முன்கூட்டியே அறிந்து தான் சிறையில் உணவு வகைகள் மாற்றியமைக்கப்பட்டதோ? செந்தில் பாலாஜிக்கு சிறையில் ஏசி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கொண்டு விசாரனை நடத்த வேண்டும். நாட்டில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. செந்தில் பாலாஜி வாயை திறக்க தொடங்கிவிட்டதால், பலர் வரிசையாக இனி சிறை செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:-

திமுகவினர் செய்த ஊழல்களை தோண்டி எடுத்து, அமலாக்கத்துறை தன் கடமையை செய்து வருகிறது. மருத்துவமனை பக்கமே செல்லாமல், மருத்துவமனையில் பொதுமக்கள் எந்த வசதியும் கிடைக்காமல் அவதிப்படுவதை பற்றி கண்டுகொள்ளாமல், செந்தில் பாலாஜி விவகாரத்தில் மட்டும் தீவிர அக்கறை காட்டி, வரிசையாக அவரைப் போய் பார்ப்பது எல்லாம் எந்த அளவுக்கு அவரை காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதேபோல அமைச்சர் பொன்முடி, என்ன ஆணவம், என்ன பேச்சு, என்னமோ வானத்தில் இருந்து குதித்து வந்தவர்போல பேசினார். எந்த அளவுக்கு செம்மண் சூறையாடப்பட்டிருக்கிறது என்பதை இப்போது அனைவரும் பார்த்திருப்பீர்கள். சூறையாடி கொள்ளையடித்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டு தமிழகமே ஓர் அமளிப்பூங்காவாக, அமளிக்காடாக, அமளி மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளில் இந்த திமுக அரசு கவனம் செலுத்துவதைவிட, ஊழல் செய்வது, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது, ஊடகங்களை பழிவாங்குவது போன்ற ஜனநாயகத்தை பழிவாங்கும் செயலைத்தான் செய்து கொண்டுள்ளனர். தமிழகம் எந்தவொரு வளர்ச்சியும் இல்லாத நிலையில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட அனைவருமே வீதிக்கு வந்து போராடுகிற ஒரு துர்பாக்கிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக இருந்துகொண்டு அவருக்கு நாட்டிலே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தங்களுடைய குடும்பம் வளம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்திலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக வளர வேண்டும் என்பதற்காக கோடி கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.