கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என அண்ணாமலையின் அறிக்கைக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து உள்ளார்.

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் முடக்கி வைக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் 2006-ம் ஆண்டு ரூ.6,000 என ஆரம்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011-2012-ல் ரூ.12,000 ஆகவும், தற்போது ரூ.18,000 ஆகவும் உயர்த்தி முதல் இரு கர்ப்பத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.4,000 ரூபாய்க்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் ரூ.14,000 பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கர்ப்பத்திற்கு மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்துடன் இணைந்து ரூ.5,000-மும் (மத்திய அரசின் பங்காக ரூ.3,000-ம் மாநில அரசின் பங்காக ரூ.2,000-ம்) டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.18,000-ல் மாநில அரசு ரூ.15,000- (2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்பட) வழங்குகிறது. மத்திய அரசு ரூ.3,000-ம் மட்டுமே வழங்குகிறது. 2-வது கர்ப்பத்திற்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நேரடியாக 5 தவணை ரூ.14,000/- மற்றும் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள், இரண்டிற்கு மேற்பட்ட கர்ப்பங்களுக்கும், புலம் பெயர்ந்த கர்ப்பிணிகளுக்கும் ரூ.4,000 மற்றும் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2006 முதல் இதுவரை ரூ.11 ஆயிரத்து 702 கோடி நிதியானது 1 கோடியே 14 லட்சத்து 51 ஆயிரத்து 567 கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் மூலம் 2018-2019-ல் இருந்து, முதல் கர்ப்பத்திற்கு மட்டும் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.3,000-ம் மாநில அரசின் மூலமாக ரூ.2,000-ம் பெறப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.9,000 அதே முதல் கர்ப்பத்திற்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் ரு.14,000-ல் மத்திய அரசின் சார்பாக ரூ.3,000/-ம் மாநில அரசின் சார்பாக ரூ.11,000-ம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் கர்ப்பத்தில் 10 லட்சத்து 70 ஆயிரத்து 765 கர்ப்பிணிகளுக்கு பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் மூலமாக நிதியுதவி தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும், 5 லட்சத்து 36 ஆயிரத்து 192 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு தேசிய நலக்குழுமத்தில் இருந்து, தேசிய தகவல் மையம், சென்னை மூலமாக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக திருப்பப்பட்டுள்ளது.

மேற்கண்ட குறைகளை களைவதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை முதன்மை செயலர் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு, 13.06.2022, 17.10.2022 மற்றும் 12.12.2022 ஆகிய நாட்களில் 3 முறை ஆய்வு கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ்நாடு தேசிய திட்ட குழுமம் சார்பாக தேசிய தகவல் மையத்தின், சென்னை குழுவானது, 11.01.2023 மற்றும் 01.05.2023 ஆகிய தினங்களில் டெல்லி தேசிய தகவல் மையத்திற்கு சென்று, மென்பொருள் என்ஜினீயர்களுடன் நேரடியாக ஆய்வு கூட்டம் நடத்தி பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 1.0-ல் உள்ள குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாகவும், மென்பொருள் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மறு பதிவேற்றத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதங்களை மறுபதிவேற்றம் செய்து விரைவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி தொகை கொடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மென்பொருளில் தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்நாடு அரசால் நிறுத்தி வைக்கப்படவில்லை. சிறிது காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி நிதியுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.