மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூர் வீடியோ தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியதுடன், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி, “நேற்று பகிரப்பட்ட வீடியோவால் நாங்கள் மிகவும் தொந்தரவுக்குள்ளாகி உள்ளோம். இந்தச் சம்பவம் மிகவும் கவலையளிக்கும் ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்; நடவடிக்கை எடுங்கள். விரோதத்தை தீர்த்துக்கொள்ள பெண்களை வன்முறையின் கருவியாக பயன்படுத்தப்படுவது அரசியலமைப்பு ஜனநாயகத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் எடுப்போம். இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிந்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தெரிவித்தார்.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து மத்திய அரசு மற்றும் என்.பிரேன் சிங் தலைமையிலான மாநில அரசிடமிருந்தும் அறிக்கை கேட்டுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை ஜூலை 28-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்கை இன்று வியாழக்கிழமை தொலைப்பேசியில் அழைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சம்வத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், நேற்று வெளியான கொடூர சம்பவத்தின் வீடியோவுக்குப் பின்னர் முதல் முறையாகபிரதமர் மோடி பேசுகையில், “எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
“குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன். இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு நமது சமூகத்தில் இடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்” என்று மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.