திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் பழிவாங்கப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதை கடுமையாக விமர்சித்துள்ளார். “திமுக இதுவரை ஜெயலலிதா உட்பட யாரையும் பழிவாங்கியதே கிடையாதா?” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையிலேயே அடைக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாகவே, அடுத்ததாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அதிரடி ரெய்டை நடத்திய அமலாக்கத்துறையினர், அவரை இரண்டு முறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையும் நடத்தினர். மேலும், அவருக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அமலாக்கத்துறையினரின் இந்த நடவடிக்கையை, மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரிடம் ஒரு தனியார் யூடியூப் சேனலில் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
நான் கடலூர் சிறையில் இருந்த போதே, என்னை மேலும் 4 வழக்குகளில் கைது செய்தார்களே நினைவிருக்கிறதா? அதெல்லாம் எப்போது பதியப்பட்ட வழக்குகள் தெரியுமா? அனைத்துமே அதிமுக ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள். ஒன்று, எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கு. இன்னொன்னு ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது மகனையும் விமர்சித்த வழக்கு. மீதி இரண்டு, Go Back Modi போட்டதற்கான வழக்கு. இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 2020-ம் ஆண்டு. இது பழைய வழக்குகள் தானே. அப்போ எதுக்கு நான் 2022-இல் ஜெயிலில் இருக்கும் போது, அந்த வழக்குகளை என் மீது போட்டீர்கள்? இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையா இல்லையா? நான் ஒரு சாதாரண, எந்த பின்புலமும் இல்லாத ஆள். என்னையே நீங்க இப்படி பழிவாங்குனீங்களே.. அப்போது ஒரு அமைச்சரை, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கக்கூடிய பொன்முடியை பாஜக பழிவாங்காதா?
என்னை விடுங்க.. 1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீது பதியப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை, 2014 வரை ஏன் நீங்கள் பின்தொடர்ந்து சென்றீர்கள்? அது பழிவாங்கும் நடவடிக்கை கிடையாதா? நீங்கள் பழிவாங்கும் போது பாஜக பழிவாங்கக் கூடாதா.. சரி இது எல்லாவற்றையும் விடுங்க.. செந்தில் பாலாஜியை கைது செய்யும் போது ‘தொட்டுப் பார்’.. ‘சீண்டி பார்’.. என பேசி ஸ்டாலின் வீடியோ போட்டாரே.. பொன்முடிக்கு ஏன் ஒரு வீடியோ கூட வரல? பெங்களூருக்கு தானே ஸ்டாலின் போயிருக்காரு. ஒரு வீடியோ கூட போட முடியாதா? சரி.. சிறைச்சாலை திமுகவினருக்கு புதிதல்ல.. இதற்கெல்லாம் நாங்கள் அசர மாட்டோம்னு சொல்றீங்கல்ல.. அப்போ எல்லோரும் போய் சிறையிலேயே உட்கார வேண்டியதுதானே..
சரி.. இப்போது உண்மையாகவே பொன்முடியை பாஜக பழிவாங்குகிறதா என்று பார்ப்போம். விழுப்புரத்தில் உள்ள செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய்க்கு செம்மண் எடுத்துள்ளார் பொன்முடி. இதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. இவரே கனிமவளத்துறை அமைச்சராம். இவர் சொந்தக்காரங்களுக்கே மண் எடுக்க டெண்டர் கொடுப்பாராம். பொன்முடி தனது மகனுக்கும் உறவினர்களுக்கும் மண் அள்ளும் டெண்டரை கொடுக்கிறார். மண் அள்ள சொன்னா, ரோட்டை பெயர்த்து மண் அள்ளி இருக்கிறார்கள். எத்தனை லோடு தெரியுமா? இதையெல்லாம் விடுங்க.. பொன்முடியின் மகனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சர்வே எண்ணில் 10 ஆயிரம் லோடு மணல் அள்ளலாம் என அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதை விட எத்தனை லோடு அதிகமாக மணல் அள்ளப்பட்டிருக்கிறது தெரியுமா? 10 ஆயிரம் லோடு எடுக்க வேண்டிய இடத்தில் 33 ஆயிரத்து 94 லோடு மணல் எடுத்திருக்கிறார்கள். இதுல அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 2 கோடி 67 லட்சம். இன்னொரு இடத்தில் 34,899 லோடு எடுக்க வேண்டிய இடத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 332 லோடு எடுத்துருக்காங்க. இப்போ சொல்லுங்க.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததில் முகாந்திரம் இருக்கா இல்லையா. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.