மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை நினைக்கத் தூண்டியது எது என்று தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்த தனது மவுனத்தை கலைத்துவிட்டார். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏதோ ஒன்றை திறந்து வைப்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அவர் செல்லும்போது மணிப்பூர் மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. எது அவரை மணிப்பூரை நினைத்துப் பார்க்க தூண்டியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சொல்ல முடியாத கொடூரத்தின் வீடியோவா? மணிப்பூரில் நடந்த மனித உரிமை மீறல்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டதா? முதலில் பிரதமர் செய்யவேண்டியது, மணிப்பூரில் மதிப்பிழந்த முதல்வர் பிரேன் சிங் ஆட்சியைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவதுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.