மணிப்பூர் சம்பவம் காட்டுமிராண்டித்தனமான செயல்: மம்தா பானர்ஜி

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்துக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மணிப்பூரில் மெய்தி, குகி இனத்துக்கு இடையே 2 மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள காங்போபி மாவட்டத்தில் குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். கடந்த மே 4-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு நேற்று முன்தினம் வெளியானதால், இந்த கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மனித தன்மையற்ற இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அந்தவகையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘ஒரு வெறிப்பிடித்த கும்பல் 2 பெண்களை கொடூரமாக நடத்தும் மணிப்பூரின் கொடூரமான வீடியோவைக் கண்டு மனம் உடைந்து, ஆத்திரம் ஏற்படுகிறது. விளிம்புநிலைப் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளால் ஏற்படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் புரிந்து கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது’ என ஆவேசமாக குறிப்பிட்டு இருந்தார். சமூக விரோதிகளின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.