மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த நெஞ்சைப் பதற வைக்கும் கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், ஜூலை 24-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாஜக ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பாஜக அரசு தடுக்க தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஒன்றிய பாஜக அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது.
மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார். இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து வரும் 23.07.2023 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தொடர்ச்சியாக, 24.07.2023 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாவட்ட கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.